Logo
தலைமை அலுவலகம் : 46, சம்பத் நகர், ஈரோடு - 638 011.
போன் : 93622 65446, 97887 30000.
முகப்பு | தொடர்புக்கு
 
கொங்குநாடு முன்னேற்றக் கழகம்

கல்தோன்றி, மண்தோன்றி காலத்திலேயே தோன்றிய தொன்மையான இனம் தமிழினம் ஆகும். "தமிழன் என்று சொல்லடா ! தலை நிமிர்ந்து நில்லடா" என்ற வரிகள் நமது இனத்தின் பாரம்பரியத்திற்கு பொருந்தக் காணலாம். தமிழகத்தின் ஒரு அங்கம் - "இனங்களிலேயே உயர்ந்த இனமாம் கொங்கு இனம்" வாழும் கொங்கு நாடு ஆகும்.

கொங்கு நாடு பகுதியில் பணிகளைச் செய்திட ஒரு வலிமையான அமைப்பு இல்லை என்ற குறை எல்லோருக்கும் உண்டு. ஆண்ட, ஆளுகின்ற ஆட்சியாளர்களால் கொங்கு மண்டலம் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது என்று தெரியவில்லை. இந்தப் பகுதிக்கு ஏற்றவாறு நீண்டகாலத்திட்டங்கள் ஏதும் இல்லை. மக்களின் நீண்ட நாள் கோரிக்கைகள் செயல் வடிவம் பெறவில்லை.

இப்பகுதியில் வாழும் மக்கள் பெரிய அளவில் விவசாயத்தையே நம்பி வாழ்கிறார்கள். இருப்பினும் பல்வேறு பிரச்சனைகளால் தொடர்ந்து நஷ்டத்தில்தான் விவசாயம் செய்ய வேண்டி உள்ளது. ஆண்டாண்டு காலமாக ஓடியாடி உழவன் கண்ட பலன் என்ன? பூமித்தாயோடு தினம் தினம் உறவாடும் கிராமத்து மக்களின் கண்ணீர் நின்றபாடில்லை.

மண்ணைப் பயன்படுத்தி, இந்த உலகிற்கே மாசற்ற உணவளிக்கும் உழவனின் நிலையை மாற்ற யாரும் முன் வரவில்லை. இதற்கு மேல் யாரைக் கேட்பது என்ற வழியும் தெரியவில்லை.

கொங்கு நாட்டில் இன்று தொழில் துறையும் நலிவடைந்து வருகிறது. கொங்கு நாடு முழுவதும் பல்வேறு தொழில் முனைவோர் உள்ளனர். தங்களுடைய கடின உழைப்பாலும், அயராத முயற்சியினாலும் முன்னேற்றம் கண்டாலும் கூட, இன்று பல்வேறு இன்னல்களைச் சந்தித்து வருகின்றனர்.

கடுமையான மின் தட்டுப்பாடு, மூலப்பொருள் தட்டுப்பாடு, கட்டுபடியாகாத விலை என தொடர்ந்து பல பிரச்சனைகள் வந்து கொண்டே இருக்கின்றது. இதனால் பொருட்களின் உற்பத்தி குறைகிறது. வங்கிகளில் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்த முடியாமல் தவிக்கின்றனர். வெளிநாட்டு வர்த்தகம் தொடர்பான உடன்பாடுகளை இழக்கின்றனர்.

தொழிற்சாலைகளின் தரம் உயர்த்தி, சுற்றுப்புறம் மாசுபடுவதை கட்டுப்படுத்த வேண்டும். சாயக்கழிவுநீர் போன்ற அவசியமான பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண வேண்டும். சுற்றுப்புறச்சுழலைக் காக்க வேண்டும்.

தொடர்ந்து வரும் நஷ்டத்தினால் தொழில் நலிவடைவது மட்டுமல்ல, தொழிலாளர்களும் வேலை இழக்கின்றனர். போதுமான சம்பளம் கிடைப்பதில்லை. அவர்கள் வேறு ஊர்களுக்கு செல்லும் நிலை ஏற்படுகிறது.

கல்லூரிகள் பெருகி வந்த போதும், ஏழை, நடுத்தர மக்களின் குழந்தைகளுக்கு இடம் கிடைப்பது அரிதாக உள்ளது. மருத்துவம், பொறியியல் போன்ற துறையில் போதுமான முன்னுரிமை இல்லை. கிராமப்புற மாணவர்களின் ஆரம்பக்கல்வித்தரம் மேம்படுத்தப்பட வேண்டும். அப்பொழுதுதான் நகரப் பகுதி மாணவர்களுடன் சேர்ந்து போட்டியிட முடியும். மேலும் எதிர்கால வாழ்க்கைக்கு கல்வி அவசியம் என்பதைப் பற்றிய விழிப்புணர்வு பட்டி, தொட்டிவரை ஏற்பட வேண்டும்.

விவசாய நிலங்கள் அனைத்தும் இன்று வர்த்தகப் பயன்பாட்டிற்கு மாறிவிடும் நிலை உள்ளது. எதிர்காலத்தில் விவசாயம் செய்ய நினைத்தாலும், இடம் இருக்காது. அதற்கு சரியான வழிவகை காணவேண்டும்.

எதிர்காலத்தில் கொங்கு நாட்டில் குடிநீருக்கே கூட தட்டுப்பாடு ஏற்படலாம். எனவே நீர் ஆதாரங்களைப் பெருக்க வேண்டும். வனப்பகுதி அழியாமல் காக்க வேண்டும். மரம் வளர்த்து பசுமை குணம் மாறாமல் காப்பாற்ற வேண்டும். நதிநீர் இணைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து, நதிகளில் நீர் கலப்பதைத் தடுக்க வேண்டும். குறைந்தபட்சம் தமிழக நதிகளை இணைப்புக் கால்வாய்கள் மூலம் இணைக்க வேண்டும். விவசாயம் அழிந்து வரும் நிலையில், பல லட்சக்கணகான குடும்பங்கள் பட்டினியில் வாடுகின்றனர். அவர்களை பட்டினிச் சாவிலிருந்தும், கடனிலிருந்தும் மீட்க வேண்டும். பல்வேறு நல்ல திட்டங்களை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

மக்களைச் சட்டத்தின் பெயரால் மிரட்டும் வன்கொடுமை தடுப்புச்சட்டம், கொத்தடிமைச் சட்டங்களில் பொதுமக்கள் பாதிக்காத வகையில் கட்டுப்பாடுகள் கொண்டுவர வேண்டும். இந்தச் சட்டத்தினால் கிராமங்களில் ஒற்றுமையாக இருந்த பொதுமக்கள் இடையே தற்பொது ஜாதியின் அடிப்படையில் பிரிவினை ஏற்படுகிறது. இதனால் ஒருவருக்கொருவர் - விரோத மனப்பான்மையுடன் செயல்படும் சூழ்நிலை ஏற்படுகிறது.

அயல்நாட்டு மது வகைகளால் உடலுக்கு பல்வேறு கேடுகள் ஏற்படும். மேலும் மதுவில் போதையூட்டும் ஆல்கஹால் தவிர வேறெதுவும் இல்லை. ஆனால் கள்ளில் போதைக்கு காரணமான ஆல்கஹாலின் அளவு குறைவு. எனவே இயற்கையாக தென்னை மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய "தென்னம்பால்" என்னும் கள் இறக்க அனுமதி வேண்டும். கள்ளை மதுபானப் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும்.

இதுபோல் கொங்கு நாடு சந்தித்து வரும் பல்வேறு இன்னல்களால், வாழுகின்ற மக்கள் மிகவும் கஷ்டப்படுகிறார்கள். இந்த நிலை மாற வேண்டும். இதற்கு எப்போது மாற்றம் கிடைக்கும் என்று ஏங்கிய மக்களுக்கு, விடியல் கிடைக்கப்போகின்றது.

நம்முடைய இன்னல்களுக்குத் தீர்வுகாண நமக்கு நாமே அமைப்புதான் "கொங்குநாடு முன்னேற்றக் கழகம்" ஆட்சிக்கு வருவது மட்டுமே நமது நோக்கமல்ல, கொங்கு நாட்டில் வாழுகின்ற மக்கள் அனைவருக்கும் பயன்படும் திட்டங்களை தீட்டி இனியும் தாமதிக்காமல் போர்க்கால அடிப்படையில் செயல்படுத்த வேண்டும். மக்களின் தேவையை உணர்ந்து பொறுப்புணர்வோடு செயல்படுவதே நோக்கமாகும்.

 
 
முகப்பு | கழகம் | கொங்கு செய்திகள் | தேர்தல் செய்திகள் | வரலாறு | முக்கிய நிகழ்வுகள் | படங்கள் | வரைபடங்கள் | ஒளி & ஒலிகள் | தொடர்புக்கு
Copy Right © 2011-2012. www.knmkparty.com. All Rights Reserved.          Maintained by : Jaynand